search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விபத்து மரணம்"

    ராமநாதபுரம் அருகே அடுத்தடுத்து விபத்தில் லாரி டிரைவர் மற்றும் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #accidentcase

    கமுதி:

    கமுதியைச் சேர்ந்தவர் குணசேகரன் (வயது 30). இவர் கோட்டைமேடு பகுதியில் இருந்து கமுதிக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.

    குண்டத்துவீரன் கோவில் வளைவில் மோட்டார் சைக்கிள் வந்து கொண்டிருந்தது. அப்போது கமுதியில் இருந்து அபிராமம் நோக்கி வந்த மினிலாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இந்த விபத்தில் குணசேகரன் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை கமுதி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே குணசேகரன் பரிதாபமாக இறந்தார்.

    விபத்து குறித்து கமுதி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து மினிலாரி டிரைவர் தனகேசரனை கைது செய்தார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெறுகிறது.

    நயினார்கோவில் அருகே உள்ள அரசடிவந்தல் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் (49) லாரி டிரைவர். இவர் இருசக்கர வாகனத்தில் அரியேந்தல் பகுதியில் சென்றபோது கார் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கணேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து அவரது மனைவி இந்திராகாந்தி கொடுத்த புகாரின் பேரில் பரமக்குடி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கந்தசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    காளையார்கோவில் கிருஷ்ணாநகர் பகுதியில் வசிக்கும் துரைப் பாண்டியின் தாயார் கல்யாணி (70) நேற்று இரவு வாட்டர் டேங் அருகில் உள்ள சாலையில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததார்.

    அப்போது காரைக்குடி நோக்கிச்சென்ற அரசு பஸ் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் கல்யாணி சம்பவ இடத்தில் இறந்து விட்டார்.

    அவரது மகன் துரைப்பாண்டி கொடுத்த புகாரின் பேரில் காளையார் கோவில் போலீசார், அரசு பஸ் டிரைவர் நயினார் கோவிலைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். #accidentcase

    கோவையில் மோட்டார் சைக்கிள் தடுப்புச்சுவரில் மோதி 2 வாலிபர்கள் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Accidentcase

    கோவை:

    கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் அபுதாகிர்(வயது 20). கரும்புகடையை சேர்ந்தவர் செய்யது தவுபிக்(20). நண்பர்களான இவர்கள் இருவரும் கார் டிங்கரிங் வேலை செய்து வந்தனர்.

    விடுமுறை நாளான நேற்று இரவு பீளமேடு செல்வதற்காக இருவரும் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். பீளமேடு பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே சென்ற போது எதிர்பாராதவிதமாக சாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியது.

    இதில் அபுதாகிர், தவுபிக் ஆகியோர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரையும் மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி அவர்கள் பரிதாபமாக இறந்தனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்ததும் போக்குவரத்து புலனாய்வு கிழக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் வீரம்மாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    பலியான இருவரின் உடல்கள் பிரேதபரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Accidentcase

    ராஜபாளையம் அருகே ஆட்டோ கவிழ்ந்து பெண் பலியானார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன. #accidentcase

    ராஜபாளையம்:

    ராஜபாளையம் அருகே உள்ள தென்மலை மாரியம்மன் கோவில் தெருவைச்சேர்ந்தவர் சண்முகத்தாய் (வயது 36) இவர் நைட்டி தைத்து தளவாய்புரத்துக்கு சென்று கொடுப்பார். வழக்கம் போல் தைத்து வைத்திருந்த நைட்டிகளை கொடுக்க ராஜபாளையத்துக்கு ஆட்டோவில் புறப்பட்டார். அவருடன் உறவினர் குரு கணேஷ் (21) என்பவரும் சென்றார். ஆட்டோவை முனியாண்டி (25) என்பவர் ஓட்டிச் சென்றார். வேகமாகச் சென்ற ஆட்டோ இனாம்கோவில்பட்டி திருப்பத்தில் கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் படுகாயமடைந்த சண்முகத்தாய் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த குரு கணேஷ், முனியாண்டி ஆகியோர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    விபத்து குறித்து தளவாய்புரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பெருமாள்சாமி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். #accidentcase

    கோவை அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறிவிழுந்து என்ஜினீயர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.#accident

    கோவை:

    தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் மதன் (வயது 24). என்ஜினீயரிங் பட்டதாரி.

    இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வேலை தேடி கோவைக்கு வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவருக்கு பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்தது.

    எனவே கோவை கணபதியில் உள்ள நண்பரின் அறையில் தங்கி இருந்து வேலைக்கு சென்று வந்தார்.

    இவரை பார்ப்பதற்காக நண்பர் பிரனவ் என்பவர் நேற்று கோவைக்கு வந்தார். பின்னர் இரவு ஊருக்கு செல்வதாக கூறினார்.

    இதனையடுத்து அவரை பஸ் ஏற்றி விடுவதற்காக மதன் தனது மோட்டார் சைக்கிளில் காந்திபுரத்துக்கு அழைத்து சென்றார். மோட்டார் சைக்கிள் சத்தி ரோடு கணபதி 3 நம்பர் பஸ் நிலையம் அருகே சென்ற போது திடீரென கட்டுபாட்டை இழந்து சாலையின் நடுவில் இருந்த தடுப்பில் மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த மதன் சம்பவஇடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய பிரனவை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இந்த தகவல் கிடைத்ததும் மத்திய போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் பலியான மதனின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #accident

    ஸ்ரீமுஷ்ணம் அருகே அரசு பஸ் மோதி லாரி டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள அகரசோழதரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா(வயது 42). லாரிடிரைவர். இவர் இன்று காலை மோட்டார் சைக்கிளில் சோழதரம் சென்று பொருட்களை வாங்கிக்கொண்டு வீடு திரும்பி கொண்டிருந்தார்.

    அப்போது எதிரே வந்த அரசு பஸ் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ராஜா தூக்கிவீசப்பட்டார். பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சோழதரம் போலீசார் விரைந்து  சென்று விபத்தில் இறந்த ராஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் இறந்த ராஜாவுக்கு அம்சவேணி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். #tamilnews

    செம்பட்டி அருகே பைக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் வாலிபர் பலியானார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சின்னாளபட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகில் உள்ள கதிரிபட்டியை சேர்ந்த ஏழுமலை மகன் ராமசாமி (வயது36). விவசாய கூலி தொழிலாளி. இவரும் இவரது நண்பரும் நேற்று இரவு மது குடிக்க ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

    ஆனால் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இன்று அதிகாலை மணல் மேடு பகுதியில் ராமசாமியும் அவரது நண்பரும் ரத்த காயங்களுடன் சாலையோரம் கிடந்தனர். அவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் சேதம் அடைந்திருந்தது.

    இது குறித்து செம்பட்டி போலீசாருக்கு பொதுமக்கள் புகார் அளித்தனர். போலீசார் ஆம்புலன்ஸ் மூலம் 2 பேரையும் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ராமசாமி ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. அவரது நண்பர் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளார். குடிபோதையில் அதிக வேகத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்றதால் விபத்து நடந்திருந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

    பூந்தமல்லியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பூந்தமல்லி:

    பூந்தமல்லியை அடுத்த பாரிவாக்கத்தை சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 28). ஏ.சி. மெக்கானிக்.

    இவர் கடந்த 8-ந்தேதி இரவு உடன் வேலை பார்க்கும் பூந்தமல்லியை சேர்ந்த முரளி (33) உடன் மோட்டார் சைக்கிளில் அய்யப்பன் தாங்கலில் இருந்து பூந்தமல்லி நோக்கி வந்தார்.

    ஆயில் மில் ரோடு பகுதியில் வந்த போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையில் விழுந்தது. இதில் அஜித்குமாரும், முரளியும் பலத்த காயம் அடைந்தனர்.

    அவர்களுக்கு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நேற்று காலை அஜித் குமாரும், இரவு முரளியும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர்.

    இதுகுறித்து பூந்தமல்லி போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews

    ஊத்துக்கோட்டையில் லாரி மோதி மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை, மேற்கு காவாங்கரை பகுதியில் வசித்து வந்தவர் பார்வதி (வயது 80). இன்று அதிகாலை அவர் ஊத்துக்கோட்டை பஸ் டிப்போ அருகே உள்ள புற்று கோவிலை சுத்தப்படுத்த நடந்து சென்றார்.

    சென்னை-திருப்பதி நெடுஞ்சாலையில் நடந்து சென்றபோது அவ்வழியே வந்த லாரி திடீரென பார்வதி மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து ஊத்துக்கோட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்- இன்ஸ்பெக்டர் வேலு மற்றும் போலீசார் விரைந்த வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரை கைது செய்தனர். #Tamilnews

    குன்னத்தூரில் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க சென்ற பனியன் கம்பெனி உரிமையாளர் விபத்தில் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குன்னத்தூர்:

    திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் சுண்டப்பாளையத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 28). இவர் குன்னத்தூர் பவர் அவுஸ் அருகே பனியன் கம்பெனி நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகவில்லை.

    ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க ஒருசில நாட்கள் தாமதமானது. பின்னர் பணம் ஏற்பாடு செய்தார். பணத்தை எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். அப்போது கருணாம்பதியை சேர்ந்த ராஜமாணிக்கம் (42) என்பவர் மற்றொரு மோட்டார் சைக்கிளில் எதிரே வந்தார். எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதின. இந்த விபத்தில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

    அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். செல்லும் வழியிலேயே பனியன் கம்பெனி உரிமையாளர் செந்தில்குமார் பரிதாபமாக இறந்தார். ராஜமணிக்கம் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து குன்னத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஆத்தூர் அருகே கல்லூரி பஸ் மோதி கோழிப்பண்ணை மேலாளர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்தவர் பெரியசாமி. இவர் நாமக்கல்லில் உள்ள ஒரு கோழிப்பண்ணையில் மேலாளராக பணியாற்றி வந்தார்.

    தினமும் இவர் வேலைக்கு செல்வதற்கு முன்பு தனது மகன் விக்னேசை மோட்டார் சைக்கிளில் ஆரியம்பாளையத்தில் உள்ள ஒரு பள்ளிக்கு அழைத்து செல்வது வழக்கம்.

    வழக்கம்போல் இன்றும் அவர் மகனை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு பள்ளிக்கு சென்றார். தோப்புமண்டி என்ற இடத்தின் அருகே சென்றபோது எதிரே வந்த தனியார் கல்லூரி பஸ்சும் மோட்டார் சைக்கிளும் பயங்கரமாக மோதிக் கொண்டன.

    இந்த விபத்தில் படுகாயம் அடைந்த பெரியசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மகன் விக்னேஷ் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். இதை பார்த்த பொதுமக்கள் விக்னேசை மீட்டு சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஊத்துக்கோட்டையில் மோட்டார் சைக்கிள்கள் மோதலில் பெயிண்டர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள அழகிரிபேட்டை கிராமத்தை சேர்ந்தவர் தாஸ். இவரது மகன் ராமராஜ் (வயது 27), பெயிண்டர்.

    இவர் அதே பகுதியை சேர்ந்த நண்பர் பாபுவுடன் மோட்டார் சைக்கிளில் பெரியபாளையத்தில் இருந்து வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தார்.

    ஊத்துக்கோட்டை அருகே செஞ்சிகரம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது, எதிரே, ஊத்துக்கோட்டை கலைஞர்நகர் கொய்யா தோப்பு பகுதியை சேர்ந்த பிரசன்னா (26) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் திடீரென ராம்ராஜ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட ராமராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். சத்யா, பிரசன்னா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இது குறித்து ஊத்துக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews

    காசர்கோட்டில் இன்று காலை ஜீப் மீது லாரி மோதிய விபத்தில் 5 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொழிஞ்சாம்பாறை:

    கர்நாடக மாநிலம் மங்களாபுரத்தை சேர்ந்த 18 பேர் பாலக்காட்டில் நடந்த உறவினர் வீட்டு விசே‌ஷத்திற்கு ஜீப்பில் வந்தனர். விசே‌ஷம் முடிந்து நள்ளிரவு ஊருக்கு புறப்பட்டனர்.

    இன்று காலை காசர்கோடு அருகே உள்ள உப்பளா என்ற இடத்தில் வந்தபோது எதிரே மங்களாபுரத்தில் இருந்து காசர்கோட்டுக்கு சரக்கு லாரி வந்தது. எதிர்பாராதவிதமாக வேகமாக வந்த லாரி ஜீப் மீது பயங்கரமாக மோதியது. இதில் ஜீப் அப்பளம்போல் நொறுங்கியது.

    சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். ஜீப்பில் இருந்தவர்களை மீட்டபோது சம்பவ இடத்திலேயே 5 பேர் ரத்தவெள்ளத்தில் பலியானார்கள்.

    மற்றவர்கள் படுகாயத்துடன் அலறி சத்தம்போட்டனர். காசர்கோடு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தன்.

    இதில் 3 பேரின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்தது. இதனையடுத்து அவர்கள் மங்களாபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இன்று அதிகாலை முதலே கேரளாவில் பலத்த மழை பெய்து வருவதால் மீட்பு பணியில் கடும் சிரமம் ஏற்பட்டது. விபத்தில் இறந்தவர்கள் பெயர் விபரங்கள் உடனே தெரியவில்லை. இது குறித்து காசர்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews

    ×